சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (40). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரவுடியான இவர், சேலம் ஆனந்தா பாலம் அருகே பழக்கடை நடத்தி வந்தார். கிருபாகரனின் நண்பர் ஒருவரின் மனைவியுடன் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவர் பழகி வந்தார். இதனை அறிந்த கிருபாகரனும் அவரது நண்பர்களும், மோகனை கண்டித்ததால், அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கிருபாகரனும், அவரது நண்பர்களும் நேற்று முன்தினம் இரவு ஆனந்தா பாலம் அருகே உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர். மேட்டுத் தெருவைச் சேர்ந்த மோகனும் நண்பர்களுடன் அங்கு இருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் பலத்த காயமடைந்த கிருபாகரன், அவரது நண்பர்கள் உசேன், அம்ஜத், சீனிவாசன் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாகரன் உயிரிழந்தார். சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மோகன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.