திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைப் பதற்காக பழைய சாலையை பெயர்த்தெடுத்து (மில்லிங்) ஒரு மாதத்துக்கு மேலாகியும் இது வரை புதிய சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் ரயில் நகர் வரை இருவழித்தடங்களிலும் தலா ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், புதிய சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக் கைகள் வைக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, ஒரு மாதத்துக்கு முன்பு இயந்திரம் மூலம் பழைய சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது.
புதிய சாலை அமைப்பதற்காக தார் பேரல்கள் கொண்டு வரப்பட்டு சாலை ஓரங்களில் வைக்கப் பட்டிருந்த நிலையில், திடீரென இந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பல இடங்களில் மேடு பள்ளங்களாகவும் ஏற்ற இறக்கத்துடனும் உள்ள இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள் ளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல் வோர் சறுக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் திருவெறும்பூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவில் சாலை யின் இருமருங்கிலும் ஆயிரக்கணக் கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக் கானோர் நாள்தோறும் அலுவலகம், கடைகள், பள்ளி, கல்லூரி களுக்குச் செல்ல இந்த சாலை யையே பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், புதிய சாலை அமைக்க பழைய சாலை தோண்டப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் புதிய சாலை அமைக்கப் படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு புதிய சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக இந்த சாலையை பராமரித்து வரும் ஒப்பந்த நிறுவனமான மதுக்கான் தரப்பில் விசாரித்த போது, ‘‘புதிய சாலையை உடனடியாக அமைக்கவே பழைய சாலை பெயர்த்தெடுக் கப்பட்டது. ஆனால், இந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் தொடர்ந்து பணியை மேற்கொள்ளவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்’’ என தெரி வித்தனர்.