இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வழிபாட்டுத்தலங்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளித்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று திருச்சியில் வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தலங்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் புனித மாதமாக கடைபிடிக்கப்படும் ரம்ஜான் மாதத்தில் இரவு சிறப்புத் தொழுகை நடத்துவார்கள் என்ப தால், இரவு 10 மணி வரை அனுமதியளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதியளித்து நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று, உரிய உத்தரவு பிறப்பித்த தமிழக அரசுக்கும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல ஆண்டுகளாக தமிழக அரசு ரம்ஜான் காலத்தில் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் பச்சரிசி வழங்கி வருகிறது.
ஆனால், நிகழாண்டு இதுவரை அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. எனவே, உடனடியாக அரசாணை வெளியிட்டு பள்ளிவாசல்களுக்கு விலையில்லா பச்சரிசியை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.