ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தலித் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் அ.தமிழ்வேந்தன் தலைமை வகித்தார்.
தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இளைஞர் எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் துரைவளவன், திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகி முகில் ராசு, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனர் அ.சு.பவுத்தன் ஆகியோர் பேசினர்.
இதேபோல தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து தலைமை வகித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் எனக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.