அவிநாசி அருகே கவுசிகா நதியில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கவுசிகா நதி பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் வளர்கின்றன. இந்நிலையில், அங்குள்ள பழமையான வேப்ப மரங்களை கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் இளைஞர்கள் வெட்டி எடுத்துச் செல்வதை, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக அவிநாசி வட்டாட்சியர், வஞ்சிபாளையம் பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு சமூக ஆர்வலர்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் அவிநாசி வட்டாட்சியர், வஞ்சிபாளையம், கணியம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, "இந்த பகுதி, திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ளது. இருப்பினும், வட்டாட்சியர் மற்றும் மரம் வெட்டப்பட்ட நபரிடம் காரணங்கள் கேட்டு கடிதம் பெற்றுள்ளோம். 6 வேப்ப மரங்களை வெட்டியுள்ளதாக தெரிகிறது. மாவட்ட எல்லையில் நடந்திருப்பதால், இதுதொடர்பாக சூலூர் வட்டாட்சியருக்கும் தகவல் அளித்துள்ளோம். மேல்நடவடிக்கையை அவர்கள்தான் எடுக்க இயலும்" என்றார்.