ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, மேலும் இருவரை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் வளையங்காடு என்.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (47). இவர், 'வீரசின்னம்மாள்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இவரிடம் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், ஏலச்சீட்டு எடுத்தவர்கள் பணம் கேட்கவே, முனியாண்டி காலதாமதப்படுத்தி வந்துள்ளார். சில நாட்கள் கழிந்த நிலையில், முனியாண்டி அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, வீட்டை காலி செய்து தலைமறைவாகியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட ஜெகநாதன், மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், நொடிப்பு நிலை அடைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு, முனியாண்டி தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே, சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏற்கெனவே முனியாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நிறுவனத்தின் பங்குதாரரும், முனியாண்டியின் உறவினருமான திருப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49), பிரபு (37) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.