கொல்லிமலை 11-வது கொண்டை ஊசி வளைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 
Regional02

கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 24 பேர் காயம் :

செய்திப்பிரிவு

கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 24 பேர் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த 24 பேர் வேன் மூலம் இரு தினங்களுக்கு முன்னர் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர்.

கொல்லிமலையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று மதியம் ஊருக்கு புறப்பட்டனர். வேனை டெல்லிபாபு என்பவர் ஓட்டிச் சென்றார்.

மலைப் பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவில் வேன் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 24 பேர் காயமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சேந்தமங்கலம், நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக கொல்லிமலை வாழவந்திநாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT