சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்து வழக்கில் தீர்வு காணப்பட்டு, அனிதா என்பவருக்கு ரூ.1.65 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வழங்கினார். 
Regional02

சேலம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் - 2,646 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.16.19 கோடி வழங்கல் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2,646 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, தீர்வுத் தொகையாக ரூ.16 கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 115 வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற முகாம் தொடக்க விழா சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்து தொடங்கிவைத்தார். மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் மற்றும் உரிமையியல் நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம், ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் முகாம் நடந்தது. இதில், மொத்தம் 17அமர்வுகளில் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்டவை சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சேலத்தில் நடந்த முகாமில் சேலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தைச் சேர்ந்த அனிதா என்பவருக்கு 8 மாதத்துக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்து தொடர்பான வழக்கில் சமரசம் ஏற்கப்பட்டு காப்பீடு நிறுவனம் ரூ.1.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வழங்கினார்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 4,097 வழக்குகள் சமரசத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், 2,646 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, அவற்றுக்கு தீர்வுத் தொகையாக ரூ.16 கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 115 வழங்கப்பட்டது.

குறிப்பாக, 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT