Regional03

உற்பத்திச் செலவு அதிகரித்து கடுமையாக பாதிக்கப்படுவோம் - உரங்களுக்கான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் : டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து, உரங்களின் விலை யும் திடீரென உயர்த்தப்பட் டுள்ளதால், உற்பத்திச் செலவு அதிகரித்து கடுமையாக பாதிக்கப்படுவோம் என்பதால், உர விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயத்துக்கு பயன்படுத்தப் படும் ரசாயன உரங்களை தயாரிக் கும் நிறுவனங்கள் கடந்த 3 நாட்க ளுக்கு முன்பாக டிஏபி 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கான விலையை ரூ.1,200-ல் இருந்து ரூ.1,900 ஆக உயர்த்தியுள்ளன. அதேபோல, காம்ப்ளக்ஸ் 15:15 உரம் ரூ.1,150-ல் இருந்து ரூ.1,650 ஆகவும், காம்ப்ளக்ஸ் 20:20 உரம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,350 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியது:

காவிரி விவசாயிகள் பாது காப்பு சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன்:

2015-ம் ஆண்டு பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி யில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், 6 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு விவசாயியின் வரு வாயும் இரட்டிப்பாக்கப்படும் என சூளுரைத்தார். ஆனால், தற்போது, மத்திய அரசின் ஆதரவுடன் உரங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை நியாயப்படுத்த வேண்டுமெனில், மத்திய அரசு உடனடியாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 என விலை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையெனில், உரங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாரன்:

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நெல் கொள்முதல் விலை ஆண்டுக்கு கிலோவுக்கு 55 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், டிஏபி உரம் விலை கிலோவுக்கு ரூ.15 உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், உரங்களின் விலை உயர்வால் விவசாயமே செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப, கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க வேண்டும். உரங்களின் விலை உயர்வால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்டங்களின் ஒருங்கி ணைப்பாளர் ப.ஜெகதீசன்:

விவசாயத்துக்கான உரங்க ளின் விலையை திடீரென உயர்த் தியுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு மகசூல் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தாலும், விவசாய இயந்திரங்களின் டீசல் செலவு, தொழிலாளர்களின் கூலி உயர்வு என உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, உரங்களின் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ராயமுண்டான்பட்டி விவசாயி வெ.ஜீவக்குமார்:

பெட்ரோல் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதுபோல, ரசாயன உர உற்பத்தி நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி வழங்கு வதுடன், விலை உயர்வை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT