திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக 5 வகையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களிடையே கரோனா வைரஸ் குறித்தும், தொற்று பரவல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிட, கபசுர குடிநீர் மற்றும் அதிமதுர குடிநீர் அருந்த செய்ய வேண்டும். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. முகக்கவசம் அணியவில்லை என்றால், ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கரோனா குறித்து, அச்சப்பட தேவையில்லை. தமிழக அரசு அறிவித்துள்ள, கட்டுப்பாடுகளை கடைபிடித்து திருநெல்வேலி மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுவுள்ள, அரசு அலுவலர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 2,761 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. சூழ்நிலைக்கேற்ப படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்படும். தற்போதுவரை மாவட்ட அளவில் 44,207 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மாவட்டத்தில் உள்ள 64 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 20 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் ஊரக அளவில் 60 மற்றும் நகர்புறங்களில் 10 சளி, காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தவும், நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரி சோதனை மேற்கொள்ளவும், கபசுர குடிநீர், மல்டி விட்டமின், ஜிங்க் மாத்தி ரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முககவசம் அணியாமலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியும் செயல்பட்ட நபர்களிடமிருந்து கடந்த 1.3.2021-ம் தேதி முதல் தற்போதுவரை ரூ.10.78 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், திருநெல்வேலி சார் ஆட்சியர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
7 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்
திருநெல்வேலியில் மாநகராட்சி சார்பில் 7 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள 9 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு நோய் அறிகுறிகளுடன் வருவோருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. கொக்கிரகுளம் 8-வது வார்டு, பேட்டை, பாளையங்கோட்டையில் 14-வது வார்டு, மேலப்பாளையத்தில் 26-வது வார்டு உள்ளிட்ட 7 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என கண்டறியப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.