தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் ஆய்வு செய்தார். 
Regional03

தூத்துக்குடி மாவட்டத்தில் - 45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் : சிறப்பு அதிகாரி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட கணேஷ்நகர், முள்ளக்காடு ஆகியநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை, அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான குமார் ஜெயந்த் நேற்று ஆய்வு செய்தார். கரோனா நோயாளிகள் சிகிச்சை மையம் அமைய உள்ள தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்ட அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, திருமண நிகழ்வுகளில்‌ 100 பேருக்கு மிகாமலும்‌, இறுதி ஊர்வலங்களில்‌ 50 பேருக்கு மிகாமலும்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது‌. உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், நகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் ஷரண்யாஅறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜ், மாநகர நகர்நல அலுவலர் வித்யா மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT