Regional03

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதலை அதிகாரிகள் குழு கண்காணிக்க அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலககூட்டரங்கில், கரோனா தடுப்பு விழிப்புணர்வுநடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி குமார்ஜெயந்த் தலைமை வகித்து பேசியதாவது:

கரோனா நோய்த் தொற்றை முற்றிலும்தடுக்கும் விதமாக, தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும்நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைசெய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் தடுப்பூசிகளை போட வேண்டும். கரோனா குறித்த பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து துறை அரசு அதிகாரிகளும் குழுக்கள் அமைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், கரோனா பரிசோதனை முகாம்களை ஊரகப் பகுதியில் அதிகளவில் நடத்த வேண்டும். தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும், என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் ஷரண்யாஅறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆலைகளுக்கு துடிசியா வேண்டுகோள்

தூத்துக்குடி துடிசியா தலைவர் கே.நேரு பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை: தொழிற்சாலைகளுக்கு வரும் பணியாளர்களுக்கு தினமும் வெப்பநிலை பரிசோதனை செய்வது, அனைத்து தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வது, கை சுத்திகரிப்பான் திரவம் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவது, நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, தேவையான சிகிச்சை அளிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT