Regional02

தனியார் அமல்படுத்தும் விலை உயர்வை முறியடிக்க - என்.டி.சி. ஆலைகள் மூலமாக நூல் உற்பத்தி : மத்திய அரசுக்கு திருப்பூர் எம்.பி. ஆலோசனை

செய்திப்பிரிவு

தனியார் ஆலைகள் அமல்படுத்தும் நூல் விலையேற்றத்தை தடுக்க என்.டி.சி. ஆலைகள் மூலமாக நூல் உற்பத்தி செய்ய வேண்டுமென, மத்திய அரசுக்கு திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளருமான கே.சுப்பராயன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூர் - ஊத்துக்குளி சாலையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

மோடி ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெறும் என்று நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால், அனைத்து தொழில்களையும் அழித்து கார்ப்பரேட்கள் வளம் பெறும் கொள்கையை பாஜக அரசு கடைப்பிடிக்கிறது. அதன் ஒருபகுதிதான் இந்த நூல் விலையேற்றம். திருப்பூரில் வேலைக்கு வந்து தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பின்மையையும், பின்னலாடைத் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பையும் இந்த நூல் விலையேற்றம் ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய ஜவுளிக் கழகத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்குகின்றன.

இதன்மூலமாக நூல்களை தயார் செய்து தமிழகத்தின் தேவைக்கு நியாயமான விலையில் மத்திய அரசு வழங்கினால்,திருப்பூர் பனியன் தொழில் காப்பாற்றப்படும். 10,000 தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதன்மூலமாக தனியார் ஆலைகளால் அடிக்கடி ஏற்படும் நூல் விலையேற்ற தாக்குதல் முறியடிக்கப்படும். இதனை மத்திய அரசுக்குஆலோசனையாக வைக்கிறேன்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை விரைவில் சந்தித்து வலியுறுத்துவேன். திருப்பூர் பிச்சம்பாளையம்புதூர் அருகே நல்லாற்றில், சாய ஆலைகளின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதுவாடிக்கையாகி வருவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பி.ஆர். நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT