ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ரங்கராஜ் (62). விசைத்தறி தொழிலில் ஈடுபட்டிருந்தார். பல்வேறு இடங்களில் கடன் பெற்று தொழில் நடத்தி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கியதில் ரங்கராஜுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் இரவு கோவை மருத்துவமனையில் இருந்து ரங்கராஜை அழைத்துக்கொண்டு, அவரது மனைவி ஜோதிமணி (55) மற்றும் ஓட்டுநர் ராஜா(41) ஆகியோர் பெருந்துறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு பங்க்கில் பெட்ரோல் கேட்டுள்ளனர். ஆனால், அங்கு தராததால் மற்றொரு பங்க்கில் வாங்கியுள்ளனர்.
பெருமாநல்லூர் அருகே பொரசுபாளையம் பிரிவில் காரை நிறுத்தி, ரங்கராஜ் மீது பெட்ரோலை ஊற்றி காரோடு எரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்து பெட்ரோல் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது போலவும், அவரை காரில் இருந்து இறக்குவதற்குள் கார் முற்றிலும் எரிந்தது போலவும் நாடகமாடியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகன் நந்தகுமார் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூர் போலீஸார் விசாரித்தனர். இதில் ரங்கராஜின் மனைவி ஜோதி, கார் ஓட்டுநர் ராஜா ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். தொடர்ந்து விசாரித்ததில் ரங்கராஜை பெட்ரோல் ஊற்றி வாகனத்துடன் எரித்துக் கொன்றது தெரியவந்தது. ரங்கராஜ் பெயரில் ரூ.3 கோடிக்கு காப்பீடு இருப்பதால், அந்த தொகை தனக்கு கிடைக்கும் என கருதி மனைவி கொலையில் ஈடுபட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "கணவருக்கு லட்சக்கணக்கில் கடன் இருந்துள்ளது. விபத்தில் ரங்கராஜ் காலை இழந்ததால், அதனை சுமையாக ஜோதிமணி நினைத்துள்ளார். கடன் சுமையால் குடும்பத்துக்கு சிக்கல் என ஆத்திரமடைந்து இந்த கொடூர சம்பவத்தை ஜோதிமணி செய்ததாக தெரிகிறது. கொலை வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்துள்ளோம்" என்றார்.ரங்கராஜ்