‘சேலம் ரயில்வே கோட்டத்தில் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லை. தாராளமான இடவசதியுடன் பயணிகள் கூட்ட நெரிசலின்றி பயணித்து வருகின்றனர்,’ என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் கூறியது:
ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதாகவும், பயணிகள் அமர போதுமான இடமின்றி நின்று கொண்டு பயணம் செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்கள் வெளியாகி ‘வைரலாகி’ வருகிறது. இதுபோன்ற தவறான வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லை. தாராளமான இடவசதியுடன் பயணிகள் கூட்ட நெரிசலின்றி பயணித்து வருகின்றனர். ரயில்களில் கூட்ட நெரிசல் என்ற பொய் தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் அட்டவணை நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயணிகள் அச்சப்பட தேவையில்லை.
பயணிகள் இருக்கையில் அமர்வது குறித்து எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ரயில் நிலையங்களில் கரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரயில்களில் பயணிகள் செல்ல பயணச்சீட்டு வசதி மற்றும் படுக்கை வசதி போதிய அளவு உள்ளது. முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், முதுநிலை இயக்க மேலாளர் பூபதிராஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.