மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் வழங்கியதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional01

ஊதியம் குறைப்பு கண்டித்து - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைவான ஊதியம் வழங்கி வருவதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. இதன் மூலம் தினமும் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 600 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் பிரிவில் 200 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த பணியை தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வந்த நிலையில், அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. தற்போது, புதியதாக ஒப்பந்தம் கோரப்பட்டு, தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதை அடுத்து, அதனை தொழிலாளர்கள் ஏற்க மறுத்து பழைய ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கடந்த மாதம் தொழிலாளர்கள் பெற்ற சம்பளத்தை அனல் மின் நிலைய வளாகத்தில் உள்ள தேசிய கொடி கம்பத்தின் கீழ் ஒரு பையில் ரூ.6.5 லட்சத்தை வைத்து விட்டனர். இப்பணத்தை நிர்வாகத்தின் பாதுகாவலர்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

ஊதிய குறைப்பு நடவடிக்கையை ஊழியர்கள் ஏற்க மறுத்து நேற்று (9-ம் தேதி) காலை திடீரென அனல் மின் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊதிய பிரச்சினை குறித்து நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ள னர்.

SCROLL FOR NEXT