சேலத்தில் சகோதரர்களை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் பிடித்து 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு நார்த்தஞ்சேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(26). இவரது தம்பி ஜெகநாதன் (23). இவர்கள் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தை அயோத்தியாப்பட்டணம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, அரூரில் உள்ள தீர்த்தமலை கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பினர்.
அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் நான்கு பேரும் ஊர் திரும்பி கொண்டிருந்த போது, குப்பனூர் சோதனைச் சாவடி அருகே காரில் இருந்த கும்பல், ராஜேந்திரன், ஜெகநாதன் இருவரையும் தாக்கி, கடத்திச் சென்றது.
இதுகுறித்து நண்பர்கள் இருவரும் காரிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார் உஷார் படுத்தப்பட்டு கடத்தல் கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காரிப்பட்டி செல்லும் சாலையில் காரை வழிமறித்த போலீஸார் ராஜேந்திரன், ஜெகநாதனை மீட்டனர். அவர்களை கடத்திய சரவணன்(43), கண்ணன் (21), லோகேஷ் (28), ரகுபதி (40), மணி (46), முரளிதரன் (48), விக்ரம், அஜித் ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், ஜெகநாதன் ஆடு திருட்டு வழக்கில் கைதானவர் என்பதும், காரிப்பட்டி, வீராணம் பகுதியில் ஆடுகளை திருடியதால் சகோதரர்களை கடத்தி ஆடுகளை மீட்க திட்டமிட்டு 8 பேர் கும்பல் காரில் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.