கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை எனவும், கடந்த மாதம் முதலே தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்து வருவதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கரோனா தடுப்பூசி திட்டம் கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. ஏப்.1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3-ம் கட்டமாக கரோனா தடுப்பூசி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் பணியிடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மண்டல அளவில், கரோனா தடுப்பூசி பணிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான், வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் குறைவாக இருந்த காலங்களில், வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தடுப்பூசி பெறப்பட்டு, தொடர்ந்து செலுத்தப்பட்டது. தற்போது, போதுமான அளவு தடுப்பூசிகள் கைவசம் உள்ளன.
மேலும் கடந்த மாதம் 15-ம் தேதி முதலே பெரிய தொழிற்சாலைகள், 100-பேருக்கும் அதிகமான நபர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளோம். 100 பேருக்கும் குறைவான நபர்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களை ஒருங்கிணைத்து ஓரிடத்தில் வைத்து, தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது என்றனர்.