அவிநாசி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கூறப்படும் பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு நேற்று பூட்டு போட்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகருக்குள் உள்ள சேவூர் சாலை, கோபி, சத்தியமங்கலம், மைசூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாகும். தனியார், அரசு பேருந்துகள், பனியன் நிறுவன வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்தசாலையில் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நீதிமன்ற வளாகங்கள் உள்ளிட்டவைகளும் உள்ளன.
கிழக்கு ரத வீதி, சேவூர் சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, மங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன.
முகூர்த்த நாட்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக, விசேஷ காலங்களில் திருமண மண்டபங்களுக்கு வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படும் வகையில், சாலையை ஆக்கிரமித்து வாகனத்தை நிறுத்தி வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால், அவிநாசி - கோவை சாலை நகரப் பகுதி உள்ளிட்டவற்றில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதுடன், மழைக்காலத்திலும், இரவு நேரத்திலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட சென்று வர இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவிநாசி நகரப்பகுதியில் போக்குரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடனடியாக அப்புறபடுத்த வேண்டுமென, ஒலிப்பெருக்கி மூலமாக அவிநாசி போலீஸார் நேற்று அறிவித்தனர்.இதைத்தொடர்ந்து, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகளில் ஒலிப்பெருக்கி மூலமாக அறிவுறுத்தியும் அப்புறப்படுத்தாத 3 கார்களின் சக்கரங்களுக்கு பூட்டு போடப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இவ்வாறு வாகனங்களை நிறுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.