அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும் போது, "திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் ராஜா பவுண்டரி வீதிகளில் சுமார் 2,000 பேர் வசிக்கிறோம். குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார தேவைகளுக்காக பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், எங்கள் பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்துக்குஆளாகி வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படைதேவைகளை நிறைவேற்றுவதில்கூட, மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவது வருத்தத்தை தருகிறது. இதையடுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளோம்" என்றனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர் தண்ணீர்ப்பந்தல் கிளைச் செயலாளர் அ.உமாநாத் தலைமையில், திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த மாநகராட்சி உதவிப் பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பாளர் ராஜசேகர், குழாய் ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்த்து வைப்பதாகவும், மற்ற கோரிக்கைகள் தேர்தல் பணிச்சுமை குறைந்த பின்னர் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. திருப்பூர் 15.வேலம்பாளையம் நகரக் குழு செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.