தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு தலைமையிலான போலீஸார் மேல அரசடி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி மற்றும் சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். போலீஸாரை கண்டதும் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். அதில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது.
லாரி ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அனிஷ்(26) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மேலும் 10 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி மற்றும் லாரி, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார், அனிஷை கைது செய்தனர்.