தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய அலுவலர்களுக்கு ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. அனைவரின் ஒருமித்த பணியே இந்த வெற்றிக்கு காரணம். தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய முதல் நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல் படுத்துதல், பிரச்சாரங்களை ஒழுங்குப்படுத்துதல், வாக்குப் பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக வாக்கு எண்ணும் மைய வைப்பறைகளில் வைத்தல் வரை அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற பங்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்கள் சொந்த பணிகளை புறந்தள்ளிவிட்டு தேர்தல் பணிக்காக முழுமூச்சாக பாடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கடைசி 2 நாட்களில் தூக்கமில்லாமல் பணியாற்றியுள்ளனர். எனவே, வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கருவூலம், பொதுப்பணித்துறை, மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய போலீஸ் படைகள் என, ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க ஒத்துழைத்த தூத்துக்குடி மாவட்ட மக்கள், தேர்தலில் உதவியாக பணியாற்றிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள் அனை வருக்கும் நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன் என்றார் ஆட்சியர்.