திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் இசக்கிராஜா (32). இவரது மனைவி சந்திரா செல்வி(22). தம்பதியருக்கு ஒன்றரை மாத ஆண் குழந்தை இருந்தது. தம்பதியரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்ததால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
பல்லடம் அருகே மகாலெட்சுமி நகரில் குழந்தையுடன், சந்திராசெல்வி வசித்து வந்தார். கடந்த 6-ம் தேதி குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்திரா செல்வி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தையின் சடலம் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக சந்திராசெல்வி மீது கொலை வழக்கு பதிந்து பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.