Regional02

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு : கிராம மக்கள் மறியல்

செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் அருகே அறுந்து விழுந்த மின்சார ஒயரை தொட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தளிஅள்ளி ஊராட்சி கோயிலூரைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி. இவரது மனைவி சுதா (33). இவர்கள் மகன் முகிலன் (7). அப்பகுதியில் காற்றுடன் பெய்த மழையின் போது மின் ஒயர்கள் அறுந்து தோட்டத்தில் விழுந்தன. இதனை சீர் செய்ய மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முகிலன் அப்பகுதியில் விளையாடியபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதில் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்து, காவேரிப்பட்டணம் - வேலம்பட்டி சாலையில் தளிஅள்ளி கூட்டுரோட்டில் மறியல் செய்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் செல்ல முடியவில்லை. தகவலறிந்து அங்கு வந்த நாகரசம்பட்டி, காவேரிப்பட்டணம் போலீஸார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை ஏற்று, அப்பகுதி மக்கள் இரவு 10.30 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக நாகரசம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT