வடலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டுவதை கண்டித்து விருத்தாசலம்- கடலூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். 
Regional03

வடலூரில் நடை பாதையை ஆக்கிரமித்து - சுற்றுச்சுவர் கட்டுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

வடலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடலூர் கோட்டக்கரை கோழிபள்ளம் பகுதியில் காட்டுநாயக்கர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தை நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தை ஆக்கிரமித்து கடந்த ஒரு மாதம் முன்பு தனிநபர் ஒருவர் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வடலூர் சபை பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வடலூர் காவல் ஆய்வாளர் மரியசோபிமஞ்சுளா சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, பல ஆண்டுகளாக நடை பாதையாக பயன்படுத்தி வரும் இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம்.

அதனால் அப்பகுதியில் எந்த கட்டுமானப் பணியும் செய்யக்கூடாது என கூறியுள்ளனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என கூறி இன்ஸ்பெக்டர் சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT