எடப்பாடி அருகே காதல் திருமண தகராறில் காதலனின் தந்தை கொலையான வழக்கில் காதலியின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான 9 பேரை தேடி வருகின்றனர்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேலு (55). இவரது மகன்கள் பெரியண்ணன் (32), பிரகாஷ் (24). ஓட்டுநரான பிரகாஷ், தனது உறவினர் செல்வம் என்பவரின் மகள் சந்தியா (21) என்பவரை காதலித்து வந்தார். சந்தியா நர்சிங் கல்லூரி மாணவி. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தியா கடந்த மாதம் 13-ம் தேதி பெற்றோருக்கு தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பிரகாஷை திருமணம் செய்து கொண்டார். மேலும், இருவரும் பாதுகாப்பு கேட்டு கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீஸார் பெற்றோருடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் சந்தியாவை அவரது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி சந்தியா மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிரகாஷூடன் சென்றுவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த சந்தியாவின் தந்தை செல்வம் மற்றும் உறவினர்கள் பிரகாஷின் தந்தை தங்கவேலுவை மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தங்கவேலு கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம் என தங்கவேலுவிடம் போலீஸார் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வம் தனது உறவினர்களுடன் தங்கவேலுவின் வீட்டுக்கு சென்று, சந்தியாவை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
“பிரகாஷ் மற்றும் சந்தியா எங்கு இருக்கின்றனர்” என தனக்கு தெரியாது என தங்கவேலு கூறியுள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தங்கவேலுவை கத்தியால் குத்தி கடுமையான தாக்கினர். மேலும் தடுக்க முயன்ற தங்கவேலுவின் மூத்த மகன் பெரியண்ணனையும் அவர்கள் தாக்கி விட்டு தப்பினர். இதில், தங்கவேலு உயிரிழந்தார்.
இதுதொடர்பான புகாரின்பேரில் கொங்கணாபுரம் போலீஸார் விசாரித்து செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வந்தனர். நேற்று காலை செல்வம் (43), அவரது மனைவி செல்வி (41) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 9 பேரை தேடி வருகின்றனர்.