பர்கூர் அருகே விபத்தில் சிறுவன் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழி லாளி. இவரது மகன் கவியரசன் (10). இச்சிறுவன் நேற்று தனது பாட்டியுடன் அண்ணாநகரில் இருந்து பர்கூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து கேரளா நோக்கி மீன் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென லாரியின் பின்பக்கம் இடதுபுற டயரின் ஆக்சில் கட்டாகியதில் 2 டயரும் தனியாக துண்டாகி சாலையில் ஓடின.சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த கவியரசன் மீது லாரி டயர் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். லாரி சிறிது தூரம் ஓடிய பின் நின்றது. லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.