எடப்பாடி அருகே சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
எடப்பாடி அடுத்த வி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாசி (32). இவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்னர் சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த செல்வம் மகள் மீனா என்பவரை திருமணம் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்தலில் வாக்களிக்க எடப்பாடிக்கு வந்திருந்தார். வாக்களித்து விட்டு அம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வெள்ளநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோயில் வளவு பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக மேட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சிவகாசி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக எடப்பாடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.