Regional03

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் - வாக்குகள் பதிவான இயந்திரங்கள் 3 மையங்களில் வைக்கப்பட்டு சீல் வைப்பு :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு, வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 73.93 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 2,886 வாக்குச்சாவடிகளிலிருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டன.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரிக்கும், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரிக்கும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளிக்கும் பாதுகாப்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டன.

இதையடுத்து, நேற்று காலை கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பிரதாப்சிங், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஜயன், கமலக்கண்ணன், மதியழகன் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதேபோல, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டையிலும் தேர்தல் பொது பார்வையாளர்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில், பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அங்கு வெளி நபர்கள் யாரும் செல்லாத வகையில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் ஆயுதம் தாங்கி, இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் வகையில் ராட்சத மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT