Regional02

திருப்பூர், பல்லடத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு - போதிய பேருந்து வசதி இல்லாததால் மக்கள் மறியல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் புதிய பேருந்துநிலையம், கோவில்வழி, பல்லடத்தில் இருந்துசொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததைக் கண்டித்து மூன்று இடங்களில்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தொழில்நகரம் என்பதால், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குடும்பத்துடன் திருப்பூர், பல்லடம் பேருந்து நிலையங்களில் நேற்று காத்திருந்தனர். ஆனால் போதிய பேருந்து இயக்கப்படாததால், பலரும் உரிய நேரத்துக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று, வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில், நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததைக் கண்டித்துதிருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியதோடு மறியலில் ஈடுபட்டனர். தகவல்அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள்,பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்துசென்றனர். தனியார் வேன் உரிமையாளர்கள் தெற்கு மாவட்டஊர்களுக்குச் செல்ல பொதுமக்களிடம் அதிக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கும், வேன் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் க.சுரேஷ்குமார், பேருந்துகள் இல்லாத சமயத்தில், அதிக லாப நோக்கோடு செயல்படக் கூடாது என வேன் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

இதேபோல கோவில்வழி பேருந்து நிலையத்திலும், நெல்லை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லையெனக் கூறி சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர். இதேபோல, பல்லடம் பேருந்து நிலையத்திலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டம் கைவிடப்பட்டது. பல்லடத்தில் இருந்து 30 சிறப்புப் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 10 பேருந்துகளும், கோவில்வழியில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT