சேலம் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தினமும் 20 முதல் 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்திலும் தற்போது, தினமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி 64 பேர் தொற்றால் பாதிப்பட்டனர். நேற்று முன்தினம் 70 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை சேலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 33 ஆயிரத்து 794-ஆக உயர்ந்தது.
தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா தொற்று விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் மெத்தனம் காட்டி வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரித் துள்ளனர்.