எமக்கல்நத்தம் வாக்குச்சாவடியில் அதிமுக முகவர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏவை தாக்கி, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதி காரக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட எமக்கல்நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. நேற்று மதியம் ஒரு மணி வரையில் 64 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி இருந்தது.
இதனிடையே வாக்குச்சாவடி மையத்தில் இருந்த அதிமுக முகவர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பர்கூர் அதிமுக எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து அலுவலர்களிடம் புகார் கூறினார். அவர் வெளியே வந்தபோது, அங்கிருந்த திமுகவினர் சிலர் வாக்குவாதம் செய்து எம்எல்ஏ, பர்கூர் வட்டாட்சியர் சண்முகம் ஆகியோரை தாக்கி உள்ளனர். மேலும் எம்எல்ஏ-வின் கார் கண்ணாடியை உடைத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு துணை ராணுவப்படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர், வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்குச்சாவடியில் இருந்து அதிமுக முகவர்களை வலுக்கட்டாய மாக வெளியேற்றி உள்ளனர். தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துவிட்டு வெளியே வந்தபோது, வாக்குவாதம் செய்த திமுகவினர் தாக்கினர். மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குச்சாவடியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, என்றார்.
நிகழ்விடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர், மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ மற்றும் கட்சியினரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இந்த வாக்குச்சாவடியில் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். தேர்தலை நிறுத்த முடியாது. தாக்குதல் நடத்திய வர்கள் மீது புகார் அளித்தால், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என எஸ்பி தெரிவித்தார்.
இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.