தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய, விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், கெங்கவல்லி (தனி) தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், விவிபாட் இயந்திரங்களில் வாக்காளர்கள் வாக்களித்தபோது, அதற்கான ஒப்புகை சீட்டு பிரிண்ட் ஆகாமல் இருந்தது.
இதேபோல, சேலம் தெற்கு தொகுதி, மேட்டூர் தொகுதி ஆகியவற்றிலும் சில இடங்களில் இதே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த மாற்று விவிபாட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
இதனிடையே, ஆத்தூர் (தனி) தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ராணிப்பேட்டை சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில் அமமுக வேட்பாளரின் பெயருக்கான பட்டன், சரியாக இயங்காமல் அவருக்கான வாக்குகள் பதிவாகவில்லை என்று புகார் எழுந்தது.
தகவல் அறிந்து அங்கு சென்ற அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குச்சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டதை யடுத்து, தர்ணாவை கைவிட்டனர்.