Regional02

கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் பெய்த மழை குடிசை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி நகரில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், குடிசை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4.45 மணிக்கு அதிவேக காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின்ஒயர்கள் மீது விழுந்தன. மின்கம்பங்களும் உடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழை பெய்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைக் கால்வாயில் மழை நீர் தேங்கி கழிவுநீருடன் வெளியேறியதால் துர்நாற்றம் வீசியது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்னஏரிக்கரை சாலையின் பின்புறம் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அக்சா மசூதியை புதியதாக கட்டி வருகின்றனர். இதனால் புதியதாக கட்டி வரும் மசூதியின் முன்பு இருந்த காலி இடத்தில் பெரிய குடிசை அமைத்து தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை இங்கு 25-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடித்த சூறாவளிக் காற்றால், குடிசை இடிந்து விழுந்தது. இதில் அனைவரும் வெளியேறி நிலையில், ஜாபர் (60) என்பவர் குடிசையின் அடியில் சிக்கிக் கொண்டார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு அவர் உயிரிழந்தார்.

நிகழ்விடத்தில் டிஎஸ்பி சரவணன், நகர காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.

SCROLL FOR NEXT