தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (ஏப்.6) நடைபெறவுள்ள நிலையில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பெண் சுயேச்சை வேட்பாளர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு காரணம் கலைஞர் ஜெயலலிதா என்ற அவரது பெயர்தான்.
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை தவிர ஒன்றிரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தனர். மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலோடு ஒதுங்கிவிட்டனர். தொகுதி முழுவதும் சுற்றி வந்து தீவிர பிரச்சாரம் செய்த சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவர் அ.ஜெயலலிதா (50).
ஒரு ஆட்டோவில் தனது பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பதாகையுடன் தொகுதி முழுவதும் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
அதற்கு காரணம் ஜெயலலிதா என்ற அவரது பெயர் தான். அதுமட்டுமல்ல வில்லிசை கலைஞரான அவர் தனது பெயரை கலைஞர் அ.ஜெயலலிதா என எழுதி பிரச்சாரம் செய்ததே இந்த பிரபலத்துக்கு காரணம்.
தூத்துக்குடி எழில்நகர் எஸ்கேஎஸ்ஆர் காலனியை சேர்ந்த அரசமணி மனைவி ஜெயலலிதா (50). வில்லிசை கலைஞரான இவர் தனது 13 வயதில் இருந்தே வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராகவும், தூத்துக்குடி மாவட்டத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
அவர் கூறும்போது, என்னுடைய பெயருக்கு பின்னால் எந்த பெரிய காரணமும் இல்லை. குடும்பமே கிராமிய கலை குடும்பம் தான்.
கிராமிய கலைகளை மேம்படுத்தவும், கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அரசுகளிடம் கோரி வருகிறோம். ஆனால், யாரும் கண்டு கொள்வதில்லை. கரோனா காலத்தில் கூட அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள் தான். அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூட எங்களை பற்றி எதுவும் கூறவில்லை. கிராமிய கலைஞர்களின் கோரிக்கைகளை முன்வைத்தே தேர்தலில் போட்டியிடுகிறேன். வெற்றி, தோல்வியை பற்றி கவலை இல்லை. இந்த தேர்தல் மூலம் கிராமிய கலைஞர்களின் பிரச்சி னைகளை மக்கள் மன்றத்துக்கு கொண்டு வந்துள் ளேன். அதுவே போதும் என்றார் அவர்.