சேந்தமங்கலம் அமமுக வேட்பாளர் சந்திரன், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 
TNadu

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அமமுக வேட்பாளர் - அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் :

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக கொல்லிமலையைச் சேர்ந்த பி.சந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர் அமமுகவுக்கு வாக்கு சேகரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அமமுகவில் இருந்து விலகி திருச்செங்கோட்டில் அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அமைச்சர் பி.தங்கமணி கூறும்போது, 'சேந்தமங்கலத்தில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட பி.சந்திரன் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்', என்றார்.

அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர் சந்திரன் கூறுகையில், 'அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அக்கட்சியில் இணைந்துள்ளேன். காலம் காலமாக நாங்கள் அதிமுகதான். இடையில் அதிமுக நிர்வாகியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அமமுகவுக்குச் சென்றேன். தற்போது மனக்கசப்பு ஏற்படுத்திய நிர்வாகி அதிமுகவில் இல்லாததால் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டேன் என்றார். அதிமுகவில் இணைந்த சந்திரன் அமமுகவில் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்தசி.சந்திரசேகரன் இருந்தார். 2-வது முறையாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.

வாக்குப் பிரியும் நிலை

இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மூலம் சமரசம் செய்யப்பட்டதையடுத்து அமமுக வேட்பாளர் சந்திரன் அதிமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இது சேந்தமங்கலம் அதிமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே திருச்செங்கோடு தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.ஹேமலதா (63), பரமத்தி வேலூரில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில்நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால், அவர் அதிமுகவில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT