சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் எடப்பாடி பகுதியில் நேற்று திடீர் கோடை மழை பெய்ததால், வெயிலின் உஷ்ணத்தால் தகித்த பொதுமக்கள் குளுமையான சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை தகிக்கும் உஷ்ணத்தால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பலரும் வீடுகளில் முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணி, நுங்கு, இளநீர், கம்மங்கூழ் மற்றும் குளிர்பானங்களை குடித்து பொதுமக்கள் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை திடீரென கோடை மழை பெய்தது. விடாமல் ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் உஷ்ணத்தில் தகித்துக் கொண்டிருந்த பூமி குளிர்ச்சி அடைந்ததால், குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது.
அதேபோல, சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்தது. கோடை வெப்பத்தைத் தணிக்கும் விதமாக பெய்த மழை காரணமாக எடப்பாடி பொதுமக்கள் குளுமையான சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்தனர்.