சேலம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில், கதிர்வீச்சு கருவி பொருத்தும் பணி மந்தமாக நடைபெறுவதால், கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி வரு கின்றனர்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புற்று நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு கோபால்ட்- 60 என்ற கதிர்வீச்சு கருவி மூலமாக புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இங்கு சிகிச்சை பெற சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, புற்றுநோயாளிகள் வந்து சென்றனர்.
இந்நிலையில், கோபால்ட்- 60 கருவியின் செயல்திறன் குறைந்ததால், அதனை பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு, புதிதாக கோபால்ட்-60 டிஜிட்டல் கருவி கொண்டு வரப்பட்டன.
பழைய கருவியை அகற்றி, புதிய கருவியை பொருத்தும் பணி தொடங்கப் பட்டதால், கடந்த ஆண்டு அக்டோபரில் சேலம் அரசு மருத்துவ மனையில் புற்று நோயாளிகளுக்கான கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், புதிய கருவி பொருத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், கடந்த 5 மாதங்களாக கதிர்வீச்சு சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுவதாக நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக புற்று நோயாளிகள் சிலர் கூறியதாவது:
சேலம் அரசு மருத்துவ மனையில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சைக்கு அண்டை மாவட்டங்களில் இருந்து வந்து சென்றோம். இது பல மாவட்ட நோயாளிகளுக்கு மையமாக இருந்ததால், பயண நேரம் குறைவாகவும், தாமதமின்றியும் சிகிச்சை பெற்று வந்தோம்.
தற்போது, சேலத்தில் சிகிச்சை வசதி இல்லாததால், 5 மாதங்களாக கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, நோய் பாதிப்புடன் அவதிப்பட்டு, சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கிறது.
சிலர், சிகிச்சைக்கு செல்ல முடியாமல், புற்றுநோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சேலம் அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கருவியை தாமதமின்றி பொருத்தி, உடனடி சிகிச்சை வசதியை ஏற்படுத்தி எங்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.