சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதியில் துணை ராணுவத்தினர், போலீ ஸார், முன்னாள் ராணுவ வீரர் கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் மற்றும் எஸ்பி தீபா காணிகர் ஆகியோர் தலைமையில் அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி பாதுகாப்பு மற்றும் தொகுதி முழுவதும் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணியில், துணை ராணுவ வீரர்கள், மாநகர மற்றும் மாவட்ட போலீஸார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தொகுதி வாரியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் பட்டியலை காவல்துறை உயர் அதிகாரிகள் தயாரித்து, பாதுகாப்பு பணிக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.