தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரின் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எப்போதும் இல்லாத அளவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
சட்டப்பேரவைத் தேர்லில் இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 22-ம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கோடை வெயில் கத்திரி வெயிலைபோல சுட்டெரித்த நிலையிலும், அதனை பொருட் படுத்தாமல் சேலம் மாவட்டத்துக்கு வந்த அரசியல்தலைவர்களின் பிரச்சாரத்தை, அந்தந்த தொகுதி களிலும் மக்கள் ஆர்வமுடன் திரண்டு கேட்டனர்.
குறிப்பாக, முதல்வர் பழனி சாமியின் மாவட்டம் என்பதால், திமுக கூட்டணி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சேலம் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவில் கூடுதல் கவனம் செலுத்தினர். இதனால், முக்கிய அரசியல் தலைவர்களின் பிரச்சார மையமாக சேலம் அமைந்தது.
முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மகளிரணி மாநிலத் தலைவர் கனிமொழி, திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என பல பிரபலங்கள் சேலத்துக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, கடந்த 15 நாட்களுக்கு மேலாக, சேலத்தில் தினம் ஒரு விஐபி என தேர்தல் பிரச்சாரம் தேர்தல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களுடன் அவரவர் தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் பிரச்சாரத்தை நேற்று இரவு 7 மணிக்கு நிறைவு செய்தனர். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.