Regional01

மேட்டூர், ஓமலூர் தொகுதியில் - பறக்கும் படையினர் ரூ.3.22 லட்சம் பறிமுதல் : வங்கிக்கு எடுத்துச் சென்ற பணப்பெட்டிகளுக்கு `சீல்’

செய்திப்பிரிவு

மேட்டூர் மற்றும் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினர் ரோந்து சென்றபோது, ரூ.3.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சேலம் அருகே வங்கிக்குஎடுத்துச் சென்ற பணப் பெட்டி களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சேலம் அடுத்த அரியானூரில் தேர்தல் பறக்கும்படையினர் ராஜதுரை தலைமையில் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனில் சோதனை நடத்தினர்.

வேனில் பூட்டிய நிலையில் 4 பெட்டியும், ஒரு பெட்டி காலியாகவும் இருந்தன. வேனில் வந்த பிரகாஷ் என்பவரிடம் விசாரித்தபோது, வங்கி ஒன்றின் கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு 4 பெட்டிகளில் ரூ.1.40 கோடி எடுத்துச் செல்வதாக கூறினார்.

அதற்கான ஆவணத்தில் இருந்த தொகைக்கும் பிரகாஷ் பெட்டியில் இருப்பதாக கூறிய தொகைக்கும் வித்தியாசம் இருந்தது. மேலும், பெட்டியின் சாவி இல்லாததால் பணத்துடன் 4 பெட்டியை சீல் வைத்த பறக்கும்படையினர் அதை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே, ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் அடுத்த சாமிநாயக்கன்பட்டி பனங் காடு பகுதியில் பறக்கும்படையினர் சென்ற போது, அப் பகுதியில் நின்றிருந்த 3 பேர் தங்கள் கையில் வைத்திருந்த பையை சாலையில் வீசிவிட்டு ஓடினர். பையை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் ரூ.22,500 இருந்தது. பணத்தை கரூப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்றபோது, கருங்கல்லூரில் ரூ.90,500-ம், கோனூர் மற்றும் கருமலைக் கூடல் ஆகிய பகுதிகளில் ரூ.2.09 லட்சத்தை பறிமுதல் செய்து கொளத்தூர் மற்றும் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர் பான புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT