தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக் கான வாக்கு எண்ணும் மையம் தூத்துக்குடி அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப் பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்து இங்கு கொண்டுவரப்படும் மின்னணு இயந்திரங்களை பெறும் வசதி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் காப்பு அறைகளுக்கு வெளியே சிசிடிவி கேமரா பொருத்தும் பணி, சிசிடிவி கட்டுப்பாட்டு அறை, அலுவலர்கள் வரும் பாதை, வேட்பாளர்களின் முகவர்கள் வரும் பாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் தொகுதி வாரியாக தனித்தனி காப்பு அறைகளில் வைக்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 15 மேஜைகள் போடப்பட்டு, விரைவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். காப்பு அறை உள்ள பகுதியில் துணை ராணுவ படையினர் மட்டுமே இருப்பார்கள். 2-வது மற்றும் 3-வது அடுக்குகளில் காவல் துறையினர் இருப்பர்.
ஒவ்வொரு காப்பு அறை கதவுக்கு முன்பும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை தினசரி ஆய்வு செய்வர். தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற்றுள்ள வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சிசிடிவி வைக்கப்பட்டுள்ள பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகம் முழுவதும் 75 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன் காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்கப்படும். தேர்தல் அலுவலர்களால் வழங்கப்படும் கையுறையை வலது கையில் போட்டுக்கொண்டு வாக்களிக்க வேண்டும். கரோனா பாதிப்புக்குள்ளான நபர்கள் கவச உடையுடன் வந்து மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்கலாம் என்றார்.