Regional02

பண மோசடியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர்‌ கே.என்‌.எஸ்‌.கார்‌டன்‌ பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த்‌ சர்மா. தொழிலதிபரான இவரும், காந்தி நகர்‌ இ.பி. காலனியைச் சேர்ந்தகோகுலகிருஷ்ணனும்‌ நண்‌பர்களாக பழகி வந்துள்ளனர்‌. அப்போது, தனியார் ‌வங்கியில்‌ மேலாளராக இருப்பதாக கோகுலகிருஷ்ணன் கூறியதை, உண்மை என கிருஷ்ணகாந்த்‌ சர்மா நம்பி வந்துள்ளார்‌.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வங்கி மேலாளர்‌ பதவியில்‌ இருந்துதான் நின்றுவிட்‌டதாக கோகுலகிருஷ்ணன் ‌கூறியுள்ளார்‌. அதன்பின்,‌ வாகன ஏஜென்சி தொடங்கி, வங்கிகளில்‌ இருந்து கார்‌களை ஏலத்தில்‌ எடுத்து கோகுலகிருஷ்ணன்‌ விற்‌பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தொழிலை அபிவிருத்தி செய்ய பணம் ‌தேவைப்படுவதாகவும்‌, பணம்‌ கொடுத்தால்‌ அதிக லாபம் வரும்‌ என்றும் கிருஷ்ணகாந்த்‌ சர்மாவிடம்‌ ஆசைவார்த்தை கூறியுள்ளார்‌.

இதை நம்பி கோகுல கிருஷ்ணனின்‌ வங்கிக் கணக்‌கில்‌ கிருஷ்ணகாந்த்‌ சர்மா ரூ.94 லட்சத்து 84,300-ஐ இணையம் மூலமாக செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி கோகுல கிருஷ்ணன்‌ நடக்கவில்லை என்றும்‌,கொடுத்த பணத்தை திருப்பி அளிக்கவில்லை என்றும் கூறி, அவர்‌ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி திருப்பூர்‌மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயனிடம்‌ கிருஷ்ண காந்த்‌சர்மா புகார்‌ அளித்தார்.

மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில்,‌ கோகுலகிருஷ்ணன்‌ குடும்பத்துடன்‌ தலைமறைவானார்‌. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில்,‌ கோகுலகிருஷ்ணன்‌ பல்வேறு நபர்களிடம்‌ கோடிக்கணக்கில் ‌மோசடி செய்திருப்பதும்‌, கார் நிறுவனம்நடத்தவில்லை என்றும்‌, கார்‌ ஏஜென்சி நடத்‌துவதாக கிருஷ்ணகாந்த்‌ சர்‌மாவை ஏமாற்றி இருப்பதும்‌ தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த கோகுலகிருஷ்‌ணனை தனிப்படை போலீஸார்‌ கைது செய்து, கடந்த 15-ம் தேதி சிறையில்‌ அடைத்தனர்‌. மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு நகல்,கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோகுலகிருஷ்ணனிடம் நேற்று வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில், இதுவரை 13 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT