தூத்துக்குடியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினர், தீயணைப்பு படையினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோர் தபால் வாக்களிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார். படம்: என்.ராஜேஷ் 
Regional03

307 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற - 330 நுண் பார்வையாளர்கள் தேர்வு : தூத்துக்குடி மாவட்டத்தில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 307 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 330 நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொகுதிவாரியாக இவர்களுக்கு நேற்று ரேண்டம் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நுண் பார்வையாளர்களை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஜூஜவரப்பு பாலாஜி (தூத்துக்குடி),அஸ்வானி குமார் சவுதாரி (விளாத்திகுளம், கோவில்பட்டி), சுஷில் குமார் படேல் (திருச்செந்தூர்), சவின் பன்சால் (வைகுண்டம்), அனில் குமார் (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2,097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 302 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும், 5 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றில் பணியாற்றுவதற்காக மத்திய அரசு பணியாளர்கள் 330 பேர் நுண் பார்வையாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நுண்பார்வையாளர்கள் செல்லக்கூடிய சட்டப்பேரவை தொகுதிக்கான ரேண்டம் தற்போது நடைபெற்றுள்ளது. அதன்படி விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு 50 நுண் பார்வையாளர்களும், தூத்துக்குடி தொகுதிக்கு 71, திருச்செந்தூர் தொகுதிக்கு 48, வைகுண்டம் தொகுதிக்கு 38, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 58,கோவில்பட்டி தொகுதிக்கு 42 நுண்பார்வையாளர்களும் ரேண்டம்மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்கு முன்தினம் நுண் பார்வையாளர்களுக்கு தாங்கள் செல்லக்கூடிய வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றார் ஆட்சியர்.

நிழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன், தேசிய தகவல் மைய அலுவலர் சரவணன், தேர்தல் வட்டாட்சியர் ரகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

2-வது கட்டமாக தபால் வாக்கு

SCROLL FOR NEXT