கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 426 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டு, இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப் பள்ளி, ஓசூர், தளி 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வருகிற 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 2258 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஊத்தங்கரையில் 19 இடங்களில் உள்ள 56 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறி யப்பட்டுள்ளது. இதே போல், பர்கூரில் 21 இடங்களில் 70-ம், கிருஷ்ணகிரியில் 29 இடங்களில் 98-ம், வேப்பனப்பள்ளியில் 16 இடங்களில் 39-ம், ஓசூரில் 17 இடங்களில் 120-ம், தளியில் 21 இடங்களில் 43 என மொத்தம் 123 இடங்களில் 426 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளன. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டு, இணையதளம் மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மத்திய ராணுவ படைவீரர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளன்று (6-ம் தேதி) பணியமர்த்தப்படுவார்கள். தேர்தல் பாதுகாப்பாகவும், அமைதி யாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.