கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும்நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக-வின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் போட்டியிடுகிறார். மனுத்தாக்கல் செய்த பிறகு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றவர், பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கிருஷ்ணகிரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக கட்சியினர் தெரிவித்தனர். இதனிடையே வேட்பாளர்கள் இல்லாமல், அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியான பாமக, பாஜக, தமாகாவினர் கிராமங்கள் தோறும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, அசோக்குமாருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓரிரு நாளில் அவர் பிரச்சாரத்தில் கலந்துக் கொள்வார், எனத் தெரிவித்தனர்.