ஊத்தங்கரை அருகே குடிநீர் சீராக வழங்காததைக் கண்டித்து, தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் புதுக்காலனி, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. இதுதொடர்பாக தொடர்புடையவர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு இதுவரை குடிநீர் ஏற்றப்படவில்லை. புகார் தெரிவித்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை, போலீஸார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் அறிவுறுத் தப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட் டத்தால், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.