தாமோதரஅள்ளி ஊராட்சியில் பதிவு செய்த தபால் வாக்குகளை ரத்து செய்து மீண்டும் மறு வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என திமுகவினர் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் ஒன்றியம் தாமோதரஅள்ளி ஊராட்சி தோப்பூரைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய அவைத்தலைவர் குப்புசாமி, மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில், வயது முதிர்ந்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. தபால் வாக்குகளை கடந்த 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தாமோதரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் முருகேசன், நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்து அதிமுக, நிர்வாகிகளுடன் இணைந்து தபால் வாக்கிற்கு பணம் கொடுத்து பஞ்சாயத்தில் வேறு எந்த கட்சியினருக்கும் தகவல் தெரிவிக்காமல் வாக்குகளை பதிவு செய்து கொண்டனர். ஆகவே மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தாமோதரஅள்ளி ஊராட்சியில் பதிவு செய்த தபால் வாக்குகளை ரத்து செய்து மீண்டும் மறு வாக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.