கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதியுற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வந்தது. இந்நிலையில் நேற்று 105.8 டிகிரி பாரன்ஹீட்டாக உயர்ந்தது. நேற்று காலை 10 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி, மதியம் 1 மணி முதல் அனல் காற்று வீசத் தொடங்கியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியுடன் சென்றனர். நகரின் பிரதான சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.