தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர். படம்: என்.ராஜேஷ் 
Regional02

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு - கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. பலர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நாடு முழுவதும் முதல் கட்டமாகமுன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 45 வயதுக்குமேல் 59 வயதுக்குள் உள்ள இணைநோய்கள் கொண்டவர்களுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல்தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பிரிவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 20 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், 30-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதல் நாளிலேயே பலர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளில் எது தங்களுக்கு விருப்பமோ அதை மக்கள் போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் 2 தவணையாக தடுப்பூசி போட வேண்டும். முதல் தவணை தடுப்பூசிபோட்ட பிறகு 28 நாட்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும். ஆதார் அட்டை அல்லதுவாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

தற்போது கரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தவாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசிபோட்டுக் கொள்ள வேண்டும் எனமாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல் திருநெல்வேலியில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசிபோடப்பட்டது.

SCROLL FOR NEXT